கர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்பு நிலவரம்: பிரதமர் மோடி, மந்திரிகளுடன் ஆலோசனை - மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிவாரண நிதி தர கோரிக்கை
கர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, கர்நாடக மந்திரிகள் அசோக், பசவராஜ் பொம்மை ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அவரிடம் மந்திரிகள் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
குறிப்பாக குடகு மாவட்டம் மழையால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அர்ச்சகர் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். இதுபோல, கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்பட வடகர்நாடக மாவட்டங்கள் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வீடுகள் சேதம், பயிர்சேதம், கால்நடைகள் உயிர் இழந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக பேசினார். முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், அவருக்கு பதிலாக பிரதமருடன் கணொலி காட்சி மூலமாக பேசுவதற்கு மந்திரிகள் அசோக், பசவராஜ் பொம்மைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 2 மந்திரிகளும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு, சேதங்கள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் முழுமையான தகவல்களை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் வருவாய்த்துறை மந்திரி அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்கள். அப்போது தலைமை செயலாளர் விஜய பாஸ்கரும் உடன் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் 2 மந்திரிகளும் 15 நிமிடங்கள் காணொலிக்காட்சி மூலமாக பேசி கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து தெரிவித்தார்கள். அதனை பிரதமர் கேட்டு அறிந்துக்கொண்டார்.
கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து 2 மந்திரிகளும் விளக்கமாக எடுத்து கூறினார்கள். குறிப்பாக குடகு உள்பட மாநிலத்தில் 12 மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 13 பேர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தரை மட்டமாகி உள்ளன. பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
குடகு மற்றும் வடகர்நாடக மாநிலத்தில் 56 தாலுகாக்களில் 885 கிராமங்கள் மழையால் பெரிய அளவில் பாதிப்புகளை சநதித்துள்ளன. 3,500 கிலோ மீட்டர் தூரத்திலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 104 ஏரி, குளங்கள் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. மழையால் இதுவரை ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடியை மத்திய அரசு, கர்நாடகத்திற்கு வழங்க வேண்டும்.
மேலும் தேசிய பேரிடர் இழப்பு நிதியின் கீழ் கர்நாடகத்திற்கு அவசர நிவாரண நிதியாக ரூ.395 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். கர்நாடகத்தில் மழை போன்ற இயற்கை பேரிடரை எதிர்கொள்ள 200 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர். மழை பாதிப்புகளை எதிர்கொள்ள 4 தேசிய பேரிடர் மீட்பு படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 4 ஹெலிகாப்டர்களையும் வழங்கி உள்ளது.
கர்நாடகத்திற்கு கூடுதலாக 4 தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்பி வைக்க வேண்டும். மத்திய நீர்ப்பாசனத்துறை மூலமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அதுகுறித்து முன் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் 2 மந்திரிகளும் தெரிவித்தனர்.
அந்த விவகரங்களை கேட்டு அறிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிவாரண பணிகளை மேற்கொள்ள விரைவில் நிவாரண நிதி வழங்குவதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமருடனான காணொலி மூலம் நடந்த பேச்சின் போது மந்திரி பைரதி பசவராஜிம் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story