புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: இயக்குனர் ருத்ரகவுடு தகவல்
புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
புதுச்சேரி,
புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2020-21ஆம் கல்வி ஆண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து அரசினர் மேல்நிலைப்பள்ளிகளிலும் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் எந்தெந்த பள்ளிகளில் சேர விரும்புகின்றனரோ அப்பள்ளிகளில் தனித்தனியே விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 20-ந்தேதி மாலை 4 மணிக்குள் இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகலையும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஏதேனும் இருப்பின் அதனையும் இணைத்து அந்தந்த பள்ளிகளிலேயே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு மாணவர் விரும்பினால் எத்தனை பள்ளிகளில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களின் பழைய நகல்களை கூட சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்ப படிவத்தினை பள்ளிக்கல்வித் துறையின் இணையதள ( www.schooledn.py.gov.in ) முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பள்ளிகளில் பரிசீலிக்கப்பட்டு வருகிற 29-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 31-ந்தேதி முதல் பிளஸ்-1 சேர்க்கை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதிவரை கலந்தாய்வு நடைபெறும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 4-ந்தேதி கலந்தாய்வு நடைபெறும். தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 8-ந்தேதி கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-1 வகுப்பு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்படுகிறது. பள்ளிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story