உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் திறப்பு: இளைஞர்கள்- விளையாட்டு வீரர்கள் உற்சாகம்
நெல்லை மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் தங்களது பயிற்சியை தொடங்கினார்கள்.
நெல்லை,
கொரோனா பரவலையொட்டி கடந்த மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியதுடன், பல்வேறு கல்வி மையங்கள், பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதில் உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டு கிடந்தன. இதனால் உடற்பயிற்சி, உடல் வலிமை பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விளையாட்டு பயிற்சிகளை மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சிகூட மேற்கொள்ள முடியாமல் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் உடற்பயிற்சி மைய வளாகங்களை 10-ந்தேதி முதல் திறக்கவும், வீரர்கள் பயிற்சி எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. அங்கு தடகளம், கைப்பந்து, டென்னிஸ், நீச்சல், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்றது. இதே போல் வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கமும் நேற்று பயிற்சிக்காக திறக்கப்பட்டது. இதுதவிர மாநகர பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. தனியார் உள்ளரங்கு விளையாட்டு மைதானங்களும் நேற்று திறக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. இதையொட்டி இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள் உற்சாகத்தில் களம் இறங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story