மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 11 Aug 2020 1:32 AM GMT (Updated: 11 Aug 2020 1:32 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி, 

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்கள் சீசன் காலங்களாகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு மூலிகைகளை வருடிக் கொண்டு விழும் தண்ணீரில் குளிக்கும்போது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. எனவே, இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

வழக்கமாக ஜூன் மாதம் 1-ந் தேதி சீசன் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. இருந்தாலும் கொரோனா ஊரடங்கு தடையால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கிய சில நாட்களில் மட்டும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக ஆர்ப்பரித்துக் கொட்டியது. பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மழை அதிகமாகும்போது அவ்வப்போது அருவிகளில் வெள் ளப்பெருக்கும் ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் மழை குறைந்ததை தொடர்ந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. ஆனாலும் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நேற்று குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதேபோல் பழைய குற்றாலம் அருவிக்கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

கடந்த 2 வாரங்களாக குற்றாலத்தில் சாரல் மழையுடன் ரம்மியமாக உள்ளது. எனினும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Next Story