கொரோனா தொற்று அதிகரிப்பால் வேலூர் மாநகராட்சி பகுதியில் கோவில்கள் திறக்கப்படவில்லை: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்


கொரோனா தொற்று அதிகரிப்பால் வேலூர் மாநகராட்சி பகுதியில் கோவில்கள் திறக்கப்படவில்லை: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2020 7:12 AM IST (Updated: 11 Aug 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவில்கள் திறக்கப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. முதல் கட்டமாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து டீ, சலூன் கடைகள் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களையும், சில நாட்களுக்கு பின்னர் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழகத்தில் 10-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கோவில்கள் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கோவில்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உடைய கோவில்களாகும். மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த சூழ்நிலையில் கோவில்கள் திறந்தால் மேலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் தற்போது மாநகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் கொண்ட கோவில்கள் திறக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோவில்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தனர்.


Next Story