மராட்டியத்தில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா 256 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா 256 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 9:09 PM GMT (Updated: 11 Aug 2020 9:09 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 256 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் நேற்று புதிதாக 11 ஆயிரத்து 88 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 35 ஆயிரத்து 601 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 435 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 10 ஆயிரத்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1 லட்சத்து 48 ஆயிரத்து 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 68.79 ஆக உள்ளது.

மராட்டியத்தில் மேலும் 256 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மாநிலத்தில் 18 ஆயிரத்து 306 பேர் தொற்று நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மும்பை, தானே

மும்பையில் புதிதாக 917 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 48 பேர் உயிரிழந்தனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 224 ஆகவும், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 893 ஆகவும் உயர்ந்து உள்ளது.

தானே மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று தானே புறநகரில் புதிதாக 144 பேருக்கும், தானே மாநகராட்சியில் 198 பேருக்கும், நவிமும்பை மாநகராட்சியில் 296 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 192 பேருக்கும், மிராபயந்தரில் 172 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புனேயை பொறுத்தவரை நேற்று புனே மாநகராட்சி பகுதியில் 928 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 741 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 72 ஆயிரத்து 640 ஆகவும் (1,862 பேர் பலி), 29 ஆயிரத்து 910 ஆகவும் (527 பேர் பலி) அதிகரித்து உள்ளது.


Next Story