ஏப்ரல் முதல் ஜூலை வரை சரக்கு ரெயில்கள் மூலம் பெங்களூரு மண்டலத்திற்கு ரூ.25.91 கோடி வருவாய்
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை சரக்கு ரெயில்களை இயக்கியதன் மூலம் பெங்களூரு மண்டலத்திற்கு ரூ.25 கோடியே 91 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளதாக பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விமானம், ரெயில், பஸ் போக்குவரத்து சேவைக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. பின்னர் உள்நாட்டு விமான சேவைகள், டெல்லியில் இருந்து 12 நகரங்களுக்கு ரெயில் சேவைகள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்த நிலையில் தீவிர ஊரடங்கு அமலில் இருந்த கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு ரெயில்களை இயக்கியதன் மூலம் தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு மண்டலத்திற்கு ரூ.25.91 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இதுகுறித்து பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா கூறியதாவது:-
“கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான ஊரடங்கு காலத்தில் சரக்கு ரெயில்களை இயக்க வேண்டும் என்று எங்களுக்கு கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்றுக்கொண்டு பெங்களூரு மண்டலத்தில் இருந்து சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏப்ரல் முதல் ஜூலை வரை 15,424 வேகன்களை நாங்கள் கையாண்டு உள்ளோம். இதன் மூலம் 4 லட்சம் டன் பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. இதில் டிராக்டர்கள், கார்கள் ஆகியவையும் அடங்கும். இவற்றின் மூலம் எங்களுக்கு ரூ.25 கோடியே 91 லட்சம் வரை வருவாய் கிடைத்தது.
233 சிறப்பு ரெயில்கள்
கடந்த ஆண்டு சரக்கு ரெயில்கள் 23 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சென்றன. இந்த ஆண்டு 20 கிலோ மீட்டர் கூடுதல் வேகத்தில் அதாவது 43 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில்களை இயக்கினோம். மேலும் அட்டவணைப்படுத்தப்பட்ட 157 சரக்கு ரெயில்கள் மூலம் பழங்கள், காய்கறிகள், மருந்துகள் என 8 ஆயிரத்து 339 டன் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றோம். இதன்மூலம் எங்களுக்கு ரூ.4 கோடியே 94 லட்சம் வருவாய் கிடைத்தது.
மேலும் மாநில அரசு கேட்டு கொண்டதன் பேரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு 233 ஷர்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் எங்களுக்கு ரூ.30 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்தது. மேலும் இந்த ரெயில்களில் பயணம் செய்த குழந்தைகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் 700 சென்னப்பட்டணா பொம்மைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story