வரலாற்று சிறப்பு மிக்க அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 2 பேர் கைது மினிவேன் பறிமுதல்


வரலாற்று சிறப்பு மிக்க அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 2 பேர் கைது மினிவேன் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Aug 2020 11:58 PM GMT (Updated: 11 Aug 2020 11:58 PM GMT)

வரலாற்று சிறப்பு மிக்க அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பம் ஆற்றங்கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க அரிக்கன்மேடு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து மாட்டு வண்டி, பைபர் படகு, மினி லாரி மூலம் மணலை கடத்தி விற்கின்றனர்.

எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவதால் அரிக்கன்மேட்டில் உள்ள பழங்கால கட்டிடங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால் அதை தடுக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, கலெக்டர் அருண், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் அரிக்கன்மேடு பகுதியில் ரோந்து மேற்கொண்டு மணல் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

போலீசார் துரத்திப் பிடித்தனர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மினிவேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், உதயகுமார், மார்ஸ் அருள்ராஜ், ராஜேஷ் ஆகியோர் அங்கு சாதாரண உடையில் கண்காணித்தனர்.

நேற்று அதிகாலை அரிக்கன்மேடு பகுதியில் இருந்து மணல் கடத்திய மினிவேனை போலீசார் வழிமறித்தனர். உடனே மினி வேனில் வந்தவர்கள், வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடினர்.

பிடிபட்டவர்கள் காக்காயந்தோப்பை சேர்ந்த பாலு என்கிற குமார் (வயது 49), பொன்னிகண்ணன் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story