ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை: அம்மன் கோவில்களில் முளைப்பாரி வைத்து சிறப்பு வழிபாடு


ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை: அம்மன் கோவில்களில் முளைப்பாரி வைத்து சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 12 Aug 2020 6:56 AM IST (Updated: 12 Aug 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நெல்லையில் உள்ள அம்மன் கோவில்களில் முளைப்பாரி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நெல்லை, 

ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஊரின் காவல் தெய்வங்களான எல்லை காளியான அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். மேலும் அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையன்று அம்மனுக்கு முளைப்பாரி போட்டு, வளைகாப்பு நடத்தி, கூழ் படைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பல கோவில்களில் இந்த வழிபாடுகள் நடைபெறவில்லை. அரசு சிறிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளித்து உள்ளது.

இதையடுத்து நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள சிறிய கோவில்களான அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் பேராத்து செல்வி அம்மன், ஆயிரத்து அம்மன், புட்டாரத்தி அம்மன் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற அம்மன் கோவில்களில் நேற்று கடைசி செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

வளைகாப்பு

நெல்லை டவுனில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நேற்று காலையில் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி வைத்தும், அம்மனுக்கு வளைகாப்பு நடத்தியும் பூஜை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் டவுன் மாரியம்மன் கோவில், பாரதியார் தெரு உச்சிமாகாளியம்மன் கோவில், தங்கம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், திரிசூரியம்மன் கோவில், பாளையங்கோட்டையில் உள்ள முத்தாரம்மன்கோவில், உச்சிமாளியம்மன் கோவில்களிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அங்கு பெண்கள் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர். சில ஊர்களில் நேற்று சுடலைமாடசாமி, பேச்சி, பிரம்மசக்தி முண்டசாமி கோவில்களில் சிறப்பு பூஜையும் சிறிய கொடை விழாவும் நடந்தது. இதில் ஆடு, கோழிகள பலியிடப்பட்டன. 

Next Story