மூணாறு நிலச்சரிவில் பலியான தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்
மூணாறு நிலச்சரிவில் பலியான தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிள் கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தென்மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அவர், நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக மூணாறு நிலச்சரிவில் இறந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ரூ.25 லட்சம் நிவாரணம்
மூணாறு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். கேரளா அரசு பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆனால் கேரள விமான விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது பாரபட்சம் ஆனது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
போராட்டம்
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக்கோரி கருப்பு சட்டை அணிந்து தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 4 ந் தேதி 300 வது நாளை எட்டுகிறது. அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழியில் ஒரு போராட்டம் நடத்துவது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், தென்காசி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாண்டியன், மாநகர இளைஞர் அணி செயலாளர் கிங் தேவேந்திரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் துருரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story