முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்


முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2020 2:03 AM IST (Updated: 14 Aug 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லை என மும்பை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. கூறியுள்ளது.

மும்பை,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சக முன்னாள் கூடுதல் செயலாளர் கே.பி. கிருஷ்ணன், பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனின் முன்னாள் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோர் மீது ‘‘63 மூன்ஸ் டெக்னாலஜி’’ என்ற தனியார் நிறுவனம் சி.பி.ஐ.யில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் புகார் அளித்து இருந்தது.

அந்த புகாரில், தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தெரியவந்தபோது, ப.சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் அவர்களது பதவிகளை தவறாக பயன்படுத்தியதால் அந்த நிறுவனத்துக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்ததாக கூறியிருந்தது. இந்தநிலையில் புகார் அளித்து பல மாதங்கள் ஆனபிறகும் ப.சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் மும்பை ஐகோா்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்கள் இல்லை

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சாதனா ஜாதவ், என்.ஜே. ஜமாதர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

மேலும் சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘குற்றச்சாட்டுகளை உறுதிப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை. மேலும் புகாரின் தொழில்நுட்ப தன்மையை கருதி அது மத்திய பொருளாதார விவகார தலைமை கண்காணிப்பு அதிகாரி, நிதித்துறை அமைச்சக வல்லுநர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 25-ந் அளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினரின் ஒப்புதல் கிடைத்தபிறகு தான் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க முடியும். அதுவரை எங்களால் விசாரணையை தொடங்க முடியாது’’ என கூறப்பட்டுள்ளது.

இதேபோல தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் மிகப்பெரிய அளவில் நடந்து உள்ள இந்த ஊழல் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் மனுமீதான விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story