அரிக்கன்மேட்டில் பள்ளம் தோண்டி பாதை துண்டிப்பு மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை


அரிக்கன்மேட்டில் பள்ளம் தோண்டி பாதை துண்டிப்பு மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2020 4:08 AM IST (Updated: 14 Aug 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

அரிக்கன்மேட்டில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் அங்கு பள்ளம் தோண்டி பாதையை போலீசார் துண்டித்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் அருகே வரலாற்று சிறப்புமிக்க அரிக்கன்மேடு பகுதி ஆற்றில் இருந்து மாட்டு வண்டி, மினி லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவதால் அரிக்கன்மேட்டில் நினைவு சின்னங்களாக உள்ள பழங்கால கட்டிடங்கள் சேதமடைவதை தடுக்க கவர்னர், முதல்-அமைச்சருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் அரியாங்குப்பம் போலீசார் ரோந்து மேற்கொண்டு மணல் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மினி வேனில் மணல் கடத்தி வந்த காக்காயந்தோப்பை சேர்ந்த பாலு என்கிற குமார் (வயது 49), பொன்னிகண்ணன் (25) ஆகியோரை கைது செய்து, மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாதை துண்டிப்பு

இதனை அடுத்து அரிக்கன்மேடு பகுதியில் மணல் கடத்தலை நிரந்தரமாக தடுக்கும் வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மணல் கடத்தப்படும் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பொக் லைன் எந்திரம் மூலம் 3 இடங்களில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் மாட்டு வண்டிகள், வாகனங்கள் அங்கு செல்ல முடியாமல் போகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story