தூத்துக்குடியில் போலீசார் அதிரடி சோதனை: ரூ. 17 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது


தூத்துக்குடியில் போலீசார் அதிரடி சோதனை: ரூ. 17 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2020 6:44 AM IST (Updated: 14 Aug 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.17 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் ஸ்டேட் வங்கி காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 9-வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பிருத்திவிராஜ் (வயது 22) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் 2 சாக்கு மூட்டைகளுடன் வந்தார். அந்த மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் சுமார் 2 ஆயிரத்து 600 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.17 லட்சம் புகையிலை பொருட்கள்

இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன் மகாராஜன் (36), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சோலையப்பன் (33) ஆகியோருடன் சேர்ந்து வடமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் குறிஞ்சிநகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி, 1½ டன் எடை கொண்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 958 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 376 ஆகும்.

3 பேர் கைது

பின்னர் போலீசார், பிருத்திவிராஜ், மகாராஜன், சோலையப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய 3 கார்கள், ஒரு லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வடபாகம் போலீசாரை பாராட்டினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக் கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும், மேலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Next Story