பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது


பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2020 2:21 AM IST (Updated: 15 Aug 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வன்முறை குறித்து 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தியின் சகோதரி மகன் நவீன். இவர், சிறுபான்மையினருக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதால், கடந்த 11-ந் தேதி இரவு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அகண்ட சீனிவாசமூர்த்திக்கு சொந்தமான வீடு உள்பட 3 பேரின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டதுடன், அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்களில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வன்முறை தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் பதிவான 2 வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் வரை 146 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரமுகர்கள் பலர் அடங்குவார்கள்.

7 தனிப்படை விசாரணை

இந்த நிலையில், வன்முறை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். வன்முறையாளர்களை கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்கவும், தலைமறைவாக உள்ள வன்முறையாளர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த தனிப்படையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 7 தனிப்படைகளுக்கும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தனிப்படைக்கும் தனித்தனி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஒரு தனிப்படையினர் தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தனிப்படையினர் வன்முறை ஏற்பட காரணம் என்ன? யார் தூண்டுதலில் வன்முறை அரங்கேறியது, வன்முறைக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசியல் காரணங்கள் இருப்பதாக...

மற்றொரு தனிப்படை போலீசார் வன்முறையில் கைதான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் முகநூலில் பதிவிட்ட 2 மணிநேரத்தில் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். 2 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது எப்படி? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்றொரு தனிப்படை போலீசார் கைதானவர்களின் செல்போன்களை ஆராய்ந்து வருவதுடன், சமூக வலைதளங்களில் யார், யார் அழைப்பு விடுத்தனர், வன்முறைக்கு தூண்டியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுதவிர அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டை குறி வைத்து தாக்குதல் நடத்தியதுடன், வீட்டுக்கு தீவைத்தது எதற்காக? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த வன்முறைக்கு நவீன் வெளியிட்ட முகநூல் பதிவு ஒன்று மட்டுமே காரணம் அல்ல என்பதும், அரசியல் காரணங்கள், தலைவர்களின் பங்கு இருப்பதாகவும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு வன்முறையில் முக்கிய பங்கு இருப்பது பற்றியும் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

கவுன்சிலரின் கணவர் கைது

இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி உள்பட நகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலை வரை வன்முறையில் தொடர்புடைய மேலும் 60 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாக இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவர் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா வார்டு கவுன்சிலர் இர்ஷாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷாவும் ஒருவர் ஆவார்.

அவருக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருப்பது பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளதால், கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 60 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையின் போது இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், திடீரென்று அரங்கேறவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். 

Next Story