வன்முறையின் போது சூறையாடப்பட்ட டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


வன்முறையின் போது சூறையாடப்பட்ட டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2020 9:27 PM GMT (Updated: 15 Aug 2020 9:27 PM GMT)

வன்முறையின் போது சூறையாடப்பட்ட டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் பதிவிட்ட முகநூல் கருத்தால், கடந்த 11-ந் தேதி இரவு பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தை வன்முறையாளர்கள் சூறையாடினர்.

போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையாளர்களின் வெறியாட்டத்தால் போலீஸ் நிலைய வளாகம் அலங்கோலமாக காட்சி அளித்தது. இதனால் போலீஸ் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடந்து வந்தன.

சுதந்திர தினம் கொண்டாட்டம்

இந்த நிலையில் நேற்று டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய வளாகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோலமும் போடப்பட்டு இருந்தது. சுதந்திர தின விழாவில் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, உதவி போலீஸ் கமிஷனர் ரவிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் போலீஸ்காரர்கள் அனைவருக்கும், சரணப்பா சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா போலீஸ்காரர்கள் மத்தியில் பேசியதாவது:-

நாம் அனைவரும் காக்கி உடையை அணிந்து உள்ளோம். இது நமக்கு பெருமை. அதுவும் பெங்களூருவில் போலீஸ்காரர்களாக பணியாற்றுவது நாம் செய்த பாக்கியம். கடந்த 4 நாட்களாக நிலைமையை கட்டுப்படுத்த நீங்கள் அனைத்து விதமாக முயற்சிகளையும் எடுத்தீர்கள். உற்சாகத்துடன் பணி செய்தீர்கள். இதே உற்சாகம் கடைசி வரை இருக்க வேண்டும். பயிற்சியில் நீங்கள் கற்று கொண்டதை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. தற்போது வன்முறை நடந்த இடங்களில் அமைதி திரும்பியுள்ளது. இதற்காக அலட்சியமாக இருந்து விட வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. வீடு உள்ள காவல் பைரசந்திரா பகுதியிலும் பல்வேறு அமைப்பினர் சேர்ந்து சுதந்திர தின விழா கொண்டாடினர். அப்போது அங்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story