2 லட்சத்து 253 ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 253 ஆண்கள் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்று 69 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,509 ஆண்கள், 2,351 பெண்கள் என மொத்தம் 5,860 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 243 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 891 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,179 பேரும், திருவள்ளூரில் 422 பேரும், செங்கல்பட்டில் 376 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 18 பேரும், ஈரோட்டில் 14 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 லட்சத்து 13 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 253 ஆண்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 823 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 16 ஆயிரத்து 115 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 951 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
127 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 83 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என ஒரே நாளில் 127 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி உடல்நலக்குறைவால், கடந்த 9-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், சென்னையில் 26 பேரும், புதுக்கோட்டை, தஞ்சையில் தலா 7 பேரும், கோவை, மதுரை, விருதுநகரில் தலா 6 பேரும், திருச்சி, நெல்லை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திண்டுக்கலில் தலா 4 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், சிவகங்கை, தேனி, திருவள்ளூர், திருப்பூர், வேலூரில் தலா 3 பேரும், தூத்துக்குடி, தென்காசி, ஈரோட்டில் தலா இருவரும், அரியலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், திருவாரூரில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,641 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
5,236 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 236 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,046 பேரும், செங்கல்பட்டில் 447 பேரும், திருவள்ளூரில் 427 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 213 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 874 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 747 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 861 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 62 அரசு நிறுவனங்களிலும், 73 தனியார் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story