கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்த வண்ணம் இருந்தது. கடந்த ஒரு வாரமாக 7 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இந்த கொடிய வைரசுக்கு மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை.
முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீராமுலு ஆகியோரும், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, பா.ஜனதா எம்.பி. பகவந்த் கூபா, சுயேச்சை எம்.பி. சுமலதா அம்பரீஷ், எம்.எல்.சி.க்கள் என மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஒரு எம்.எல்.ஏ.
இதில் எடியூரப்பா, சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, பி.சி.பட்டீல், சுமலதா அம்பரீஷ் எம்.பி. மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் சோமனகவுடா பட்டீல் சாசனூர். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சோமனகவுடாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவரது மருத்துவ அறிக்கை சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
40 ஆக உயர்வு
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சோமனகவுடாவும் உறுதி செய்து உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் நலமாக உள்ளேன். எனது தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள் என்று கூறியுள்ளார்.
சோமனகவுடாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story