நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பின கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் எடியூரப்பா 21-ந்தேதி சிறப்பு வழிபாடு
நடப்பு ஆண்டில் முதல்முறையாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதைதொடர்ந்து இரு அணைகளிலும் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருணபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாகினா பூஜை செய்து முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.
மைசூரு,
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் முக்கியமானவை, கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகள்.
கபினி, கே.ஆர்.எஸ். அணைகள்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணையும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ். அணையும் அமைந்துள்ளது. கபினி அணையில் திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் திறக்கப்படும் நீர் காவிரி ஆற்றிலும் பாய்ந்தோடி டி.நரசிப்புரா அருகே திருமகூடலு பகுதியில் இரு ஆறுகளும் சங்கமித்து, அகண்ட காவிரியாக தமிழ்நாடு நோக்கி செல்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் தான் தென்கர்நாடக மற்றும் தமிழ்நாடு விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றால் மிகையல்ல.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது இந்த அணைகள் நிரம்புவது வாடிக்கையாகும். அதன்மூலம் காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர் காவிரி வழியாக தமிழ்நாடு மேட்டூர் அணையை சென்றடையும். கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை அதிகளவு பெய்து வருவதால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2019) தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்ததால், இரு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அணைகளும் முழுமையாக நிரம்பின. குறிப்பாக 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணை சுமார் 50 நாட்களுக்கு மேலாக முழு கொள்ளளவில் இருந்தது. இதனால், மைசூரு, மண்டியா, ராமநகர், பெங்களூரு மக்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் எந்த பஞ்சமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டும் பருவமழை தொடங்கும் வரை கே.ஆர்.எஸ். அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை மாநிலத்தில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகில் வெளுத்து வாங்கிய மழையால், அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது. இதனால் இரு அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.
அணைகள் நிரம்பின
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், ஆகஸ்டு மாத தொடக்கத்தில் கபினி அணையும், கடந்த 13-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. நடப்பாண்டில் இந்த அணைகள் நிரம்புவது இதுவே முதல் முறையாகும். இதன்காரணமாக இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கபிலா, காவிரி ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
தற்போது வயநாடு மற்றும் குடகில் மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8,732 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,135 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 124.60 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 9,414 கனஅடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5,318 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13,453 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
21-ந்தேதி சிறப்பு பூஜை
பொதுவாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பும்போது கர்நாடக அரசு சார்பில் முதல்-மந்திரி அந்த அணைகளுக்கு சென்று பாகினா என்ற சிறப்பு பூஜை செய்து நல்ல மழை பெய்து அணைகள் நிரம்ப காரணமான வருண பகவானுக்கு நன்றி கூறுவது வழக்கம்.
அதாவது, முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய அணைகளில், முதல்-மந்திரியாக இருப்பவர் ஒரு முறத்தில் நவதானியங்கள், துணி, மஞ்சள், வளையல், பூ, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து மற்றொரு முறத்தால் மூடி அதனை அணையில் வீசி சிறப்பு பூஜை செய்து வருணபகவானுக்கு நன்றி கூறுவது முறையாகும். அது பாகினா என்று சொல்லப்படுகிறது. இதேபோல, இந்த ஆண்டும் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளுக்கு முதல்-மந்திரியாக உள்ள எடியூரப்பா எப்போது பாகினா செய்வார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதும் முதல்-மந்திரி எடியூரப்பா பாகினா செய்வதாக இருந்தது.
ஆனால் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பாகினா செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். இதனால் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு வருகிற 21-ந்தேதி முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மந்திரி பேட்டி
இதுகுறித்து மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டும் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளன. இந்த அணைகளுக்கு முதல்-மந்திரியாக இருப்பவர் சிறப்பு பூஜை செய்து, வருண பகவானுக்கு நன்றி கூறுவது வழக்கம். எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பாகினா செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதால், வருகிற 21-ந்தேதி எடியூரப்பா கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட உள்ளார். கே.ஆர்.எஸ். அணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் இருந்தப்படி மலர்தூவியும், முறத்தை போட்டும் சிறப்பு பூஜை செய்வார். பின்னர், கபினி அணைக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மைசூரு தசரா விழா
இதற்கிடையே, இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற தசரா விழா நடக்குமா என்பது பற்றி நிருபர்கள் மந்திரி சோமசேகரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து சோமசேகர் நிருபர்களிடம் கூறுகையில், மைசூரு தசரா விழா மற்றும் டிசம்பர் மாதத்தில் தலக்காடுவில் நடக்கும் பஞ்சலிங்க தரிசனம் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி அரசு இன்னும் விவாதிக்கவில்லை. அதுபற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் தசரா விழா தலக்காடு பஞ்சலிங்க தரிசனம் பற்றி முதல்-மந்திரியின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். வருகிற 21-ந்தேதி முதல்-மந்திரி எடியூரப்பா மைசூருவுக்கு வருகிறார். அந்த சமயத்தில், தசரா விழாவை நடத்துவது பற்றி தெரிவிப்பார் என்றார்.
Related Tags :
Next Story