முழு ஊரடங்கால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி முடங்கியது கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் முடங்கின. கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆகஸ்டு மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் நெல்லையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன.
நெல்லை முடங்கியது
பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு திடலில் உள்ள தற்காலிக மார்க்கெட், மகாராஜநகர் பகுதி 3 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள், டவுன் பள்ளிக்கூட வளாகம், பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. டவுன், பேட்டை, பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இறைச்சி கடைகளில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் நேற்று ஊரடங்கு காரணமாக அங்கு யாரும் இல்லாமல் கூடாரங்கள் காலியாக கிடந்தன.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வரும் காய்கறி மொத்த மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் மற்றும் மாநகராட்சி காவலாளிகள் தவிர வேறு யாரும் இல்லை. மாநகரில் ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை நேற்று முடங்கி காணப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
மேலும் பொதுமக்களும் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள். இதனால் நெல்லையில் சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, புறவழிச்சாலை, திருவனந்தபுரம் ரோடு என எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலைகளில் நேற்று வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
நெல்லையில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே வந்த ஒரு சில வாகனங்களை நிறுத்தி விளக்கம் கேட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தோரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை மற்றும் சேரன்மாதேவி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தூத்துக்குடி
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அதே போன்று வாகன போக்குவரத்தும் முடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் திறந்திருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கூலக்கடை பஜார் ஆகிய அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
Related Tags :
Next Story