ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து அறிவுரை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு


ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து அறிவுரை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 17 Aug 2020 7:47 AM IST (Updated: 17 Aug 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார். பின்னர் அவர்களுக்கு கபசுர குடிநீரை கொடுத்து அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆகஸ்டு மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

சூப்பிரண்டு ஆய்வு

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நடந்த வாகன சோதனையின் போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றக்கூடாது என்று அறிவுரை கூறினார். தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை கொடுத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீஸ் சார்பில், அங்கு வந்த ஏழை-எளிய மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசியையும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புதிய பஸ்நிலைய வளாகம், காந்தி மைதானத்தில் இயங்கும் தற்காலிக சந்தைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் நகரில் உள்ள ஜவுளி, நகை கடைகள், புத்தகக்கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு, தெற்கு பஜார், மாதாங்கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மருந்தகம், மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே விவசாய பணிகள் மட்டும் நடந்ததால், அதில் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

சாலைகள் வெறிச்சோடியது

இதேபோல் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், உடன்குடி, குலசேரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது.

Next Story