நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி தூத்துக்குடியில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி தூத்துக்குடியில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 18 Aug 2020 4:30 AM IST (Updated: 18 Aug 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நேற்று 100 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் பாளையங்கோட்டையை சேர்ந்த டாக்டர்கள் 2 பேர், ஆயுதப்படை போலீஸ் காரர்கள் 2 பேர், அரசு ஊழியர்கள் 3 பேர் அடங்குவர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை டவுனை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர், பாளையங்கோட்டை சக்திநகரை சேர்ந்த 75 வயது முதியவர் உள்பட 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகின்ற 11 ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 625 ஆக அதிகரித்து உள்்ளது.

இவர்களில் 6 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,383 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள். 128 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கி உள்ளது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 40 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 929 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,022 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் வெளிமாவட்டங்களில் சிகிச்சை பெற்று இறந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விவரம், தூத்துக்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்து உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஆலங்குளம் யூனியன் பகுதியில் 23 பேர், கடையம் யூனியன் பகுதியில் 26 பேர், கடையநல்லூர் யூனியன் பகுதியில் 15 பேர், கீழப்பாவூர் யூனியன் பகுதியில் 46 பேர், குருவிகுளம் யூனியன் பகுதியில் 3 பேர், மேலநீலிதநல்லூர் யூனியன் பகுதியில் 5 பேர், சங்கரன்கோவில் யூனியன் பகுதியில் 6 பேர், தென்காசி யூனியன் பகுதியில் 19 பேர், வாசுதேவநல்லூர் யூனியன் பகுதியில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் தென்காசி மாவட்டத்தில் 3 பேர் இறந்து உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 52 ஆகும். இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 2 ஆயிரத்து 779 பேர். 1,201 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 72 பேர் இறந்து உள்ளனர்.

Next Story