தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசுப்பள்ளி வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு, மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை


தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசுப்பள்ளி வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு, மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2020 4:00 AM IST (Updated: 19 Aug 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சருக்கு, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது.

வாசுதேவநல்லூர்,

புதிய தென்காசி மாவட்டத்தின் தலைநகரான தென்காசி, மாவட்டத்தின் எல்லையின் தென்மேற்கு கடைசியில் அமைந்துள்ளது. ஆனால் மாவட்ட மொத்த மக்கள்தொகையில் 75 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்கள் தென்காசி நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைவிடம் தென்காசி நகருக்கு தெற்கே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் ஆயிரப்பேரி எனும் கிராமத்தின் அருகே மேலகரம் கிராமத்தில் உள்ள வேளாண்மைத்துறை விதைப்பண்ணைக்கு சொந்தமான விளைநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

தற்போது தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் அனைத்தும் விளைநிலமாகும். இந்த இடம் தேர்வு செய்யப்பட்டால் இதனைச்சுற்றிலும் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளது. இந்த இடம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தென்காசி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி உபயோகத்திற்கு போக அதிகப்படியாக உள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யலாம். ஆகையால் 4 சட்டமன்ற தொகுதி மக்களின் நலன் கருதி புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுதற்கு தென்காசி ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் அல்லது இலத்தூர் விலக்கு அருகே உள்ள இடத்தை தேர்வு செய்யலாம் என்பதை வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story