மயானத்தில் மரக்கன்றுகள் நட எதிர்ப்பு: வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


மயானத்தில் மரக்கன்றுகள் நட எதிர்ப்பு: வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2020 9:00 AM IST (Updated: 21 Aug 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மயானத்தில் மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனங்கள், தேயிலை தோட்டங்களுக்கு இடையே இக்கிராமம் உள்ளது. இங்கு தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

இந்த கிராமத்தில் இருந்து கூடலூருக்கு செல்லும் சாலையில் வட்டப்பாறை என்ற இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இங்குள்ள புதர்களை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொது மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ, தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் முற்றுகை

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மயானத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். இதையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் பயன்படுத்தி வரும் மயான நிலத்தை வனத்துறை யினர் கைப்பற்றி வனமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் ராம கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மயான நிலத்தில் மரக்கன்றுகள் மட்டுமே நடுவதாகவும், வழக்கம்போல் கிராம மக்கள் நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story