இறந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை


இறந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Aug 2020 5:30 AM IST (Updated: 22 Aug 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

இறந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தஞ்சையில், மின்வாரிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் விஜயகாந்த்(வயது 30). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சக ஒப்பந்த ஊழியர்களுடன் தஞ்சையில் இருந்து வெள்ளாம்பெரம்பூர் பகுதிக்கு மின்கம்பங்களை ஏற்றி சென்றார். விளார் புறவழிச்சாலையில் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்ததில் அடியில் சிக்கி விஜயகாந்த் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.

இதை அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்து 3 நாட்கள் ஆகியும் விஜயகாந்த் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

கிராமமக்கள் முற்றுகை

இறந்த விஜயகாந்த் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கிராமமக்கள் கோரிக்கை வைத்ததால் போலீசாரால் பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை கிராமமக்கள் நேற்றுமதியம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்னன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, நிர்வாகி கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கிராமமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வந்து, கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள், நிவாரணம் வழங்குவது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் உத்தரவு அளித்தால் விஜயகாந்த் உடலை வாங்கி செல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர்.

இதையடுத்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கிராமமக்களுடன் போலீஸ் அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இறந்த விஜயகாந்த் குடும்பத்துக்கு உயர்ந்த பட்ச இழப்பீட்டு தொகையை பெற்று தருவதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததுடன், எழுத்துப்பூர்வமாகவும் எழுதி கொடுத்தனர். இதை ஏற்ற கிராமமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, விஜயகாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் விஜயகாந்த் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story