நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்


நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 22 Aug 2020 5:48 AM IST (Updated: 22 Aug 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரூ.338 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.338 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவக்கல்லூரிக்கு 5 கட்டிடங்கள் ரூ.112 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக்கு 700 படுக்கைகள் கொண்ட 9 கட்டிடங்கள் ரூ.157 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டிலும், 8 இருப்பிட கட்டிடங்கள் ரூ.69 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணியில் சுமார் 650 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த மருத்துவக்கல்லூரி மாதிரி வடிவமைப்பையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார். கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். பின்னர் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டு உள்ளது என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சிறப்பு சிகிச்சை மையம்

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு 150 ஆண்கள், 50 பெண்கள் என 200 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையத்தில் கண்காணிப்பு கேமரா, இணையதள வசதி, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த மையத்தையும் முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு சுகாதாரத்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன், கலெக்டர் மெகராஜ், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, காண்டிராக்டர்கள் சத்தியமூர்த்தி, பி.எஸ்.டி.வி.எஸ். தென்னரசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story