நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு 9 பேர் பலி - 3 வயது குழந்தை உள்பட 397 பேருக்கு தொற்று


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு 9 பேர் பலி - 3 வயது குழந்தை உள்பட 397 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 22 Aug 2020 9:45 PM GMT (Updated: 2020-08-23T00:07:38+05:30)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். 3 வயது குழந்தை உள்பட 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தினமும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கூடங்குளம் அணுவிஜய்நகரை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் முன்னீர்பள்ளத்தில் உள்ள தொழிலாளர்கள் 15 பேர் உள்பட 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

வள்ளியூர் அருகே உள்ள பாம்பன்குளத்தை சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் தெருவை சேர்ந்த ஒருவர், பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,340 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் நேற்று 158 பேர் உள்பட மொத்தம் இதுவரை 6 ஆயிரத்து 909 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,287 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் ஒருவரும், தென்காசி பகுதியை சேர்ந்த ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 603 ஆகும். இதில் 3 ஆயிரத்து 359 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,156 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 837 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 610 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த 59 வயது ஆண், 74 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

Next Story