முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சிலை ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.
வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்றும், வழிபட்ட சிலைகளை கோவில் முன்பு வைத்து பின்னர் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் அரசு மற்றும் ஐகோர்ட்டு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அறிவிறுத்தல்களின்படி முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
19 இடங்களில் சிலை பிரதிஷ்டை
அதன்பேரில் நேற்று விழா நடந்தது. இதையொட்டி ஆண்டுதோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் இடமான முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு சிவன்கோவில் உள்பட 19 இடங்களிலும் வழக்கம்போல விநாயகர் சிலைகள் முன்கூட்டியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வடகாடு சிவன் கோவில், தில்லைவிளாகம், தெற்குகாடு, கல்லடிக்கொல்லை, ஜாம்புவானோடை, செம்படவன்காடு, ஆலங்காடு, உப்பூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை கரைப்பதற்காக நேற்று அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் மாலை அனைத்து சிலைகளும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு செல்லப்பட்டு செம்படவன்காடு பாமணியாற்றில் கரைக்கப்பட்டது.
போலீசார் கெடுபிடி
முன்னதாக வடகாடு சிவன் கோவிலில் இருந்து நடுப்பண்ணை ராமகிருஷ்ணன் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், நாகை மாவட்ட மேற்பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட தலைவர் ராகவன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், துணை தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்ல போலீசார் பல்வேறு கெடுபிடிகளை விதித்து இருந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிலையை எடுத்து சென்றனர். சிலைகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
ஒரு தரப்பினர் எதிர்ப்பு
முன்னதாக முத்துப்பேட்டை நகர பகுதி வழியாக விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியையொட்டி வன்முறை தடுப்பு வாகனம், கண்ணீர் புகை வாகனங்களும் முன் எச்சரிக்கையாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன. முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. நடமாடும் வாகனத்திலும் கேமராவை பொருத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
Related Tags :
Next Story