கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் தோல்வி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
கோவை,
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி மற்றும் வார்டு வாரியாக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் தமிழக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறு, குறு தொழில் துறையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநிலஅரசுகளின் உதவி கிடைக்கவில்லை. 6 மாத காலத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கை. அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 6 மாத காலத்திற்கான வட்டியை நீக்கம் செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசு, பிரதமரிடம் பேச வேண்டும்.
2-வது தலைநகரம்
தமிழ்நாட்டில் 2-வது தலைநகரை யார் கொடுப்பதாக சொன்னார்கள்? எத்தனை தலைநகரங்கள் வைத்துக்கொண்டாலும் தவறில்லை. மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை கொண்டது காங்கிரஸ் கட்சி. ஆனால் விநாயகர் சதுர்த்தி விஷயத்தில் அரசின் உத்தரவை மதித்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சட்டசபை தேர்தல் இடபங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம். அதற்கு முன்பாக கட்சி வளர்ச்சி பணிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். தொகுதிகள் தோறும் பாதயாத்திரையாக சென்று மக்களை சந்திப்போம்.
மத்திய, மாநில அரசுகள் தோல்வி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்து விட்டன. அரசு விழா என்பது மக்கள் பங்கெடுக்கும் விழா. இதில் அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறதா?. தவறை மூடி மறைப்பதற்காக, மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாதவர்கள் அரசு விழாவில் அனுமதிக்கப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆயூஷ் அமைச்சக கூட்டத்தில் இந்தி மொழி தெரிந்தவர்களை அனுமதிப்பது என்ற அதிகாரியின் நடவடிக்கை தவறானது.
நீட் தேர்விற்காக யாரும் உயிரை இழக்க கூடாது. மாநில அரசு விரும்ப வில்லை என்றால் நீட் நடத்த தேவையில்லை என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அ.தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்பது சாத்தியமற்றது. வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை தேறிவருகிறது. அவர் உடல்நலம் பெற காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி நிர்வாகிகள்
முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறும் போது, கோவை உள்பட பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் வீனஸ்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கணபதி சிவக்குமார், முன்னாள் மேயர் ஆர்.வெங்க டாசலம், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பச்சைமுத்து, மாநகர் மாவட்ட பொருளாளர் ஆர்.சவுந்திரகுமார், ஓ.பி.உமாபதி, எம்.கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சிகுருசாமி, ராமநாகராஜ், கே.லட்சுமிபதி, பி.பாஸ்கர், ஆர்.குணசேகரன், ஆர்.காயத்திரி, ஆர்.சாய்சாதிக், ஏ.ராஜகோபால், பாசமலர் சண்முகம், வி.ஜெகதீஷ், வி.டி.பக்தவச்சலம், டி.வினோத்குமார், எம்.கார்த்திக், ஆர்.முருகேசன், சிங்கை செந்தில், ஜே.ஜெரோம் ஜோசப், ஆ.ஹரிகோவிந்த், ஆர்.காந்தி, எம்.செந்தில்நாதன், ஆர்.கர்ணன், ஜேம்ஸ்குமார், ஜெயராஜ், கிருஷ்ணமூர்த்தி, அரோமா நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவை விமானநிலையத்தில் கே.எஸ்.அழகிரிக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story