காட்டுமன்னார்கோவில் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் அண்ணன் கொலை போலீசார் விசாரணை


காட்டுமன்னார்கோவில் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் அண்ணன் கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2020 10:38 AM IST (Updated: 23 Aug 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொத்தவாசல் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். செட்டிக்கட்டளை கிராமத்தில் நடைபெறும் திருமணத்திற்கான சுவரொட்டியில் நாகராஜனின் புகைப்படம் அச்சிடப்பட்டு, கொத்தவாசல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.

இதைபார்த்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரகாசின் அண்ணன் பிரபாகரன் நேற்று முன்தினம் இரவு அந்த சுவரொட்டியை கிழித்ததாக தெரிகிறது. மேலும் இவர்களுக்கிடையே தேர்தல் முன்விரோதமும் இருந்து வந்ததாக தெரிகிறது.

கொலை

இதுபற்றி அறிந்த நாகராஜனின் அண்ணன் ராஜேந்திரன்(55), நாகராஜனின் மகன் முத்தமிழ்செல்வன் ஆகியோர் பிரகாஷ் மற்றும் பிரபாகரனிடம் சென்று சுவரொட்டியை கிழித்தது ஏன்? என்று கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த தகராறு, இரு தரப்பினரிடையே மோதலாக உருவானது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் உருட்டுகட்டை மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ராஜேந்திரன், பிரகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முன்விரோதத்தாலும், சுவரொட்டி கிழிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story