விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி கள்ளக்குறிச்சியில் புதிதாக 58 பேருக்கு தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். கள்ளக்குறிச்சியில் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் ராஜாஜி தெருவை சேர்ந்த 62 வயதுடைய முதியவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே நயம்பாடியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவரும் கடந்த 20-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அவர்களின் இறப்பு விவரத்தை நேற்று விழுப்புரம் மாவட்ட இறந்தவரின் பட்டியலோடு சுகாதாரத்துறை சேர்த்தது. இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
133 பேருக்கு தொற்று
இதனிடையே நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 133 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் விழுப்புரம் அருகே தொந்திரெட்டிப்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், விழுப்புரம் வருமான வரித்துறை அலுவலக ஊழியர், பனமலைப்பேட்டை, வி.கிருஷ்ணாபுரம் துப்புரவு பணியாளர்கள், விழுப்புரம் அரசு பஸ் டிரைவர், வளவனூர் போலீஸ்காரர், கஞ்சனூர் போலீஸ்காரர் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,897 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,237 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 340 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், 58 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தினர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,295 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story