காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியாகாந்தி தொடர வேண்டும் சித்தராமையா கடிதம்


காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியாகாந்தி தொடர வேண்டும் சித்தராமையா கடிதம்
x
தினத்தந்தி 25 Aug 2020 12:27 AM GMT (Updated: 25 Aug 2020 12:27 AM GMT)

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று சோனியா காந்திக்கு, சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவி சோனியா காந்திக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

‘மரியாதைக்குரிய மேடம்‘ நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் உங்களுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் நிலையில் எனது கருத்தையும் முன்வைக்கிறேன். காங்கிரஸ் சிரமங்களை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல. பல இக்கட்டான சூழ்நிலையில் கட்சி மீண்டு வருவதை உறுதி செய்து உள்ளது. அனைத்து கடினமான காலங்களிலும் காந்தி குடும்பம் ஒன்றாக கட்சியை வழிநடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காந்தி குடும்பத்தினரின் பங்களிப்பு எப்போதும் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் நினைவுகளில் இருக்கும்.

இந்திரா காந்தி 1977-ம் ஆண்டு தேர்தலில் தோற்றார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மீது குறிவைக்கப்பட்டது. ஆனால் அதை இந்திரா காந்தி ஒரு சவாலாக எடுத்து கொண்டு காங்கிரசுக்கு வெற்றியை தேடிதந்தார். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் ராஜீவ் காந்தி இறந்ததும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. கட்சியின் தலைமை பொறுப்பை நீங்கள்(சோனியா காந்தி) ஏற்றுக் கொண்டீர்கள். உங்கள் கணவரை இழந்த வருத்தத்தை தாண்டி 2 இளம் குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டீர்கள். 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை கட்சியை கட்டியெழுப்ப நீங்கள் சந்தித்த கஷ்டங்கள், தடைகளை நாங்கள் அறிவோம்.

காந்தி குடும்பத்தினர்

2004-ல் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கையில்லாத போதும் நீங்கள் கட்சியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றீர்கள். மேலும் பிரதமர் பதவியை தியாகம் செய்தீர்கள். 1977 மற்றும் 1998-ம் ஆண்டில் இருந்தது போலவே காங்கிரஸ் தற்போது உள்ளது. கட்சி மட்டும் அல்ல, நாடும் நெருக்கடியில் உள்ளது. இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. ஜனநாயக தூண்கள் பா.ஜனதாவால் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. அரசியலமைப்பில் கூறப்பட்டு உள்ள கொள்கைகளை பாதுகாத்து தேசத்தின் குரலாக இருக்க இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற வலிமையான எதிர்க்கட்சி தேவை. நம் நாட்டை சிறப்பாக மாற்றுவதற்காக ஒரு கட்சியாக நாம் ஒன்றுபட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பத்தினர் வழிநடத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இது அனைத்து தலைவர்கள், கட்சி தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நீங்கள் தொடர வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன். உங்கள் உடல்நலம் இதற்கு அர்ப்பணிக்காது என்று நீங்கள் கருதினால், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தி அவருக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story