பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ. மழை மின்தடையால் விடிய விடிய மக்கள் அவதி


பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ. மழை மின்தடையால் விடிய விடிய மக்கள் அவதி
x

பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 3 செ.மீ. மழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விடிய விடிய மக்கள் அவதிப்பட்டனர்.

பாகூர், 


புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் வானில் மேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறி தென்பட்டன. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதுவையில் பல பகுதியில் லேசான மழை பெய்தது.

இதேபோல் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் - புதுச்சேரி சாலையில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. தவளக்குப்பம், பாகூர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மின்சாரம் துண்டிப்பு

மழையின்போது பலத்த காற்று வீசியதால், முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை நின்றதும் மின் வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது பல பகுதிகளில் மரக்கிளைகள் காற்றில் முறிந்து விழுந்தத்தில் மின்கம்பிகள் அறுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காட்டுக்குப்பம் துணை மின்நிலையம் அருகே உள்ள ஓடை பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், அந்த வழியாக சென்ற உயர்மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியது.

இதை அறிந்த மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரிசெய்தனர். அதிகாலை 3 மணிக்கு மேல் மின்கம்பிகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு, மின்வினியோகம் வழங்கப்பட்டது.

மக்கள் அவதி

இரவு 11 மணியில் இருந்து அதிகாலை வரை மின்சாரம் இல்லாததால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு பாகூர் பகுதியில் 3 செ.மீ. மழை பதிவானதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story