வீட்டில் தூங்கிய பெண் கொடூர கொலை போலீசார் விசாரணை
கீழப்பழுவூரில் வீட்டில் தூங்கிய பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காமராஜின் மனைவி மலர்கொடி(வயது 49). காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதையடுத்து மலர்கொடி, தனது மகன் கலைவாணனுடன்(25) வசித்து வந்தார். மலர்கொடி மாடுகள் வளர்த்து, பால் கறந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு விற்று வந்தார். கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காய்கறி லோடு ஏற்றுவதற்காக கலைவாணன் திருச்சிக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் மலர்க்கொடி மட்டும் தனியாக தூங்கியுள்ளார்.
கொடூர கொலை
நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பால் வாங்க வந்தபோது, வீட்டிற்குள் மலர்கொடி கொடூரமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள், கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மலர்கொடியின் உடலை பார்வையிட்டனர். அப்போது, அவர் தலை நசுக்கப்பட்டு, உடல் பல இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. வயிறு கிழிந்து குடல் சரிந்த நிலையில் மிகவும் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை தாக்கி துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம், என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மலர்கொடி வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து மலர்கொடியின் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மலர்கொடிக்கு யாருடனும் எந்த விரோதமும் இருந்ததில்லை. ஏழ்மையான குடும்பம் என்பதால் பணம், நகை போன்றவைகளும் அவரிடம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. மேலும் மலர்கொடியை கொலை செய்தவர்கள், வீட்டில் உள்ள எந்த பொருளையும் எடுக்க இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மலர்கொடி என்ன காரணத்திற்காக மிகக்கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டார்?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story