முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர்


முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 26 Aug 2020 4:51 AM IST (Updated: 26 Aug 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் முதல் மனைவி இருக்கும்போதே 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் தெற்கு காட்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் ராஜாத்தி என்ற கோகிலா(வயது 30). இவரது கணவர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு பிலோமின்பிரபு (11), டேனியல் ராஜபிரபு (9) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலா தனது 2 மகன்களுடன் திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகம் வந்தார். அங்கு டி.ஐ.ஜி. ஆனி விஜயாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கணவர் திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். 5 ஆண்டுகளாக திருச்சி மாநகர போலீசில் பணியாற்றும் திருமணம் ஆன பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

வீட்டை விட்டு துரத்தல்

இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டே மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். பெண் போலீசின் கணவரும் புகார் கொடுத்துள்ளார். உடனடியாக என் கணவரை குன்னூருக்கும், பெண் போலீசை தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் விடுமுறை தினத்தில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பெண் போலீசின் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தினர். ஒருமுறை கோட்டை மகளிர் போலீசுக்கு போன்மூலம் தகவல் தெரிவித்து இருவரையும் வீட்டில் கையும் களவுமாக போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி விட்டனர்.

கடந்த 18-ந் தேதி கணவர், குன்னூரில் இருந்து விடுமுறையில் வந்தவர் என்னையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார். நான் உயிருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்த எனது கணவர் மீதும், அவரை 2-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story