திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் 2,740 மாணவர்கள் சேர்க்கை
திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் 2,740 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால் தனியார் பள்ளிகளை பெற்றோர் தவிர்ப்பதால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்,
வறுமையை ஒழிக்கும் ஆயுதம் கல்வி. பொருளாதாரத்தின் அடிப்படையும் கல்விதான். அதனால்தான் வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்களது நாட்டு குழந்தைகளுக்கு இலவச கல்வியை அளிக்கின்றன. கல்வி கற்ற சமுதாயம் உயர்ந்த நிலையை அடையும். இதனால் கடனை வாங்கியாவதுதங்களது குழந்தைகளை பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். கொரோனா காலத்திற்கு முன்பு, கட்டணத்தை செலுத்தி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அந்த ஆசையை தவிடுபொடியாக்கி விட்டது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டது. வேலை இழப்பால், அன்றாட வாழ்க்கை கேள்விகுறியானது. பெரிய பெரிய தொழில்களே நசித்து, தொழிலதிபர்களை தொழிலை தொடர்ந்து நடத்த, அல்லல்படும்போது, தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி சொல்லவா வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வே ஆட்டம் காணும்போது, கட்டணம் செலுத்தி கல்வியை கற்பது என்பது கானல் நீர் போன்றது. கட்டணம் வேலையின்மை, வருமானமின்மை, குடும்பத்தை நடத்துவதில் சிரமம், போன்ற காரணங்களால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேர்க்க முடியாத நிலையில் பல பெற்றோர் உள்ளனர். இந்த நிலையில்தான்அரசு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் எல்.கே.ஜி., 1, 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கும், நேற்று முன்தினம் முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 148 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 10 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 21-ம், சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள் 15-ம், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 153 என மொத்தம் 347 பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் எந்த கட்டணமும் கிடையாது என்பதாலும், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் இருப்பதோடு, திறமையான ஆசிரியர்களும் இருப்பதால், அரசு பள்ளிகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது“எங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க சிரமங்கள் இருந்தாலும், அரசு பள்ளியில் படிக்கட்டும் என்று தமிழ்வழி கல்வியில் குழந்தைகளை சேர்த்துள்ளோம்” என்றனர். மாணவர் சேர்க்கை குறித்து கல்வி அதிகாரி பழனிசாமி கூறியதாவது:- அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை திருப்பூர் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அனைத்து வகுப்புகளிலும் அதிகரித்துள்ளது. பல பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்படும் அளவுக்கு சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் காரணம். மேலும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது மற்றொரு காரணம். சிறப்பு வகுப்புகள், சிறப்பு தேர்வுகள், விளையாட்டு போன்றவை குறித்து பெற்றோரிடம் எடுத்து சொல்லி வருகிறோம். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அரசு பள்ளிகளிலும் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்துவருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தனியார் பள்ளிகளை பெற்றோர் தவிர்ப்பதால் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படை எடுக்க தொடங்கி உள்ளனர். கடந்த 2 நாட்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 148, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 10 என மொத்தம் 158 பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் 2,740 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கணினி அறிவியல், வணிகவியல் பிரிவில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
Related Tags :
Next Story