மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் கிராம மக்களை தாக்கியதில் 4 பேர் படுகாயம் நடவடிக்கை கோரி சாலை மறியல்


மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் கிராம மக்களை தாக்கியதில் 4 பேர் படுகாயம் நடவடிக்கை கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2020 7:15 AM IST (Updated: 26 Aug 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் கிராம மக்களை தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 

திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணியை சேர்ந்தவர் மருதுபோஸ் (வயது20). விபத்தில் சிக்கிய இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது உடல் ஆம்புலன்சில் ஆலாவூரணி எடுத்து செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் பின்னால் அதே பகுதியை சேர்ந்த சிலர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

விருதுநகர் - சிவகாசி சாலையில் ஆமத்தூரில் சென்ற போது மோட்டார்சைக்கிள் தடுப்பு வேலியில் மோதியது. இதனால் இவர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் தாக்கியதில் ஆமத்தூரை சேர்ந்த சங்கர்நாத் (35), பாண்டி (45), செல்வம் (29), கருப்பசாமி (32) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறியல்

இந்தநிலையில் கிராம மக்கள், மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆமத்தூரில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆமத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story