அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஓய்வறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் ஓய்வறையில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்குள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வெடுப்பதற்காக ஓய்வு அறை உள்ளது.
இந்த ஓய்வு அறையில் உள்ள மின்விசிறியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை வளாகத்திலுள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேலூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
யார் அவர்? போலீஸ் விசாரணை
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் நீலநிற பூப்போட்ட புடவையும், நீல நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர்கள் ஓய்வறையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story