அவினாசியில் ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது


அவினாசியில் ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 5:47 AM IST (Updated: 30 Aug 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில், தம்பதியிடம் ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி, ரூ.4 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவினாசி,

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் ஆல்வின்ராய் (வயது 38). சென்னையில் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஆல்வின்ராய் தனது மனைவியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதற்கிடையில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று செல்போன் எண்ணுடன் ஒரு ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியிருந்தது. இதையடுத்து அந்த எண்ணில் ஜெனிபர் தொடர்பு கொண்டார்.

அப்போது எதிர்முனையில் பேசியவர் “ரூ.1 கோடி கடன்பெற பதிவுத்தொகை ரூ.4 லட்சத்துடன் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு வந்து, பதிவுத்தொகையை செலுத்திவிட்டு நீங்கள் கேட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். எனவே தம்பதியர் இருவரும் சென்னையிலிருந்து அவினாசியில் அவர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு வந்தனர். அங்கு தயாராக இருந்தவர், தம்பதியிடம் தன்னை ஆச்சாரியா என்று அறிமுகம் செய்து கொண்டு, நான்தான் செல்போனில் பேசி, ரூ.1 கோடி கடன் வழங்க பதிவு தொகை கொண்டு வருமாறு கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து ஆச்சாரியாவிடம், ரூ.4 லட்சத்தை அந்த தம்பதி கொடுத்துள்ளனர். அப்போது ஆச்சாரியா ஒரு பிரிப்கேசை தம்பதியரிடம் கொடுத்து இதில் ரூ.55 லட்சம் உள்ளது. மீதி பணத்தை அசல் பத்திரத்தை தந்துவிட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து தனது காரில் சென்றுவிட்டார்.

தனிப்படை அமைப்பு

சிறிது நேரத்திற்கு பிறகு தம்பதியர் பிரிப்கேசை திறந்து பார்த்தபோது அதில் குழந்தைகள் வைத்து விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் அந்த ஆசாமி மோசடி செய்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவினாசி போலீசில் ஜெனிபர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ஆச்சாரியா என்று கூறியவரை தேடி வந்தனர்.

அந்த ஆசாமியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில் அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால், செந்தில், பயிற்சி உதவி இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம், போலீசார் ரஞ்சித், ஹரிராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த ஆசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.

கைது

அப்போது கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆச்சாரியா மீது ஏற்கனவே செம்மர கடத்தல் வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. அத்துடன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆச்சாரியா காருடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று காருடன் நின்று கொண்டிருந்த ஆச்சாரியாவை சுற்றிவளைத்து பிடித்து அவினாசி போலீஸ் நிலையம் கொண்டுவந்தனர். அங்கு போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருடைய பெயர் உண்மையிலேயே ஆச்சாரியா (43) என்றும், கோவை கணபதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1லட்சத்து 20 ஆயிரமும், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளத்தில் இதேபோல் பணமோசடி செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story