கொரோனா பரிசோதனைக்கு புதிய கருவி கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்


கொரோனா பரிசோதனைக்கு புதிய கருவி கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 30 Aug 2020 6:15 AM IST (Updated: 30 Aug 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கருவியை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிவதற்காக பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பரிசோதனைகள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு கொரோனா உள்ளதா இல்லையா என்று உறுதி செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் ஒரு பரிசோதனை எந்திரம் உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும்.

இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியை பார்வையிட வந்த சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் கூடுதலாக ஒரு பரிசோதனை கருவி இருந்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரூ. 15 லட்சத்து 69 ஆயிரத்து 400 மதிப்பில் ஒரு புதிய பரிசோதனை கருவியை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இந்த பரிசோதனை கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையடுத்து சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு பொதுமக்கள், மருத்துவமனை சார்பில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் டாக்டர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

பரிசோதனை

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக ஒரு பரிசோதனை கருவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவ கல்லூரிக்கு மேலும் ஒரு பரிசோதனை கருவி வழங்க உத்தரவிட்டார். தற்போது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பரிசோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என்று மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் தெரிவித்தார்.

Next Story