கொரோனா தொற்றால் இறந்த பாதிரியார் உடலை கல்லறை தோட்டத்தில் புதைப்பதை எதிர்த்து திரண்ட பொதுமக்கள்


கொரோனா தொற்றால் இறந்த பாதிரியார் உடலை கல்லறை தோட்டத்தில் புதைப்பதை எதிர்த்து திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 30 Aug 2020 10:12 AM IST (Updated: 30 Aug 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே கொரோனா தொற்றால் இறந்த பாதிரியாரின் உடலை கல்லறை தோட்டத்தில் புதைக்க எதிரப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜான்ரவி (வயது 52). பாதிரியார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாதிரியார் ஜான்ரவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடல் குண்ணத்தூரில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதற்காக நேற்று குழியும் எடுக்கப்பட்டது.

எதிர்ப்பு

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொரோனா பாதித்தவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை அவர் வாழ்ந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும். இடம் மாறி புதைக்க முடியாது என கூறி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் இறந்த ஜான்ரவி உடல் ஏற்றப்பட்ட வேன் வந்ததும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அவர்களாகவே கலைந்து சென்றனர். பின்னனர் ஜான்ரவி உடலை கவச உடை அணிந்த சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் புதைத்தனர்.

இந்த நிலையில் பாதிரியார் உடலை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த வெங்கடேசன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story