ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,622 ஆக உயர்வு


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,622 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 Aug 2020 6:56 AM GMT (Updated: 30 Aug 2020 6:56 AM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 407 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர்,

வேலூரை அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ராணுவ வீரர், அரியானாவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டில் பணிபுரிந்து வரும் நீதிபதியின் உதவியாளர், ஊழியர் மற்றும் அவரின் பெற்றோருக்கு சளி, இருமல் உள்ளிட்டவை காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதில், 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

தனியார் மருத்துவமனையில் 30 பேருக்கு தொற்று

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள், நர்சுகள், காவலாளி உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், டபுள் ரோட்டில் கேபிள் ஆபரேட்டர், அலமேலுமங்காபுரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக், நேதாஜி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 170 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 10,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 207 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 69 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 2,658 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் 702 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,790 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 40 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story