பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2020 6:37 AM IST (Updated: 31 Aug 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

பைசுஅள்ளி அருகே கட்டப்படும் பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள முருகன் கொட்டாய், சின்னமாட்லாம்பட்டி ஆகிய இடங்களில் புதிய பகுதிநேர ரேஷன்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் வரவேற்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பகுதிநேர ரேஷன்கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 449 ரேஷன்கடைகளும், 564 பகுதிநேர ரேஷன்கடைகளும் என 1,013 ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 41 ரேஷன்கடைகள் இயங்குகின்றன. மாவட்டம் முழுவதும் தற்போது 1,064 ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. குக்கிராம பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க புதிய பகுதிநேர ரேஷன்கடைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. முருகன்கொட்டாய் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.10 கோடி நிதி

கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு புதிய கல்லூரிகளையும், புதிய பாடப்பிரிவுகளையும் உருவாக்கி வருகிறது. தர்மபுரி பைசுஅள்ளி அருகே 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளை பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், துணைப்பதிவாளர் வரதராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, தாசில்தார் கலைச்செல்வி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், செந்தில்குமார், சந்திரன் உள்பட கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story