அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் புறக்கணிக்கப்படும் நிலை


அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் புறக்கணிக்கப்படும் நிலை
x
தினத்தந்தி 31 Aug 2020 1:40 AM GMT (Updated: 31 Aug 2020 1:40 AM GMT)

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில்பாதை திட்டப்பணி போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்,

மதுரை-நாகர்கோவில் இடையேயான ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க முடியவில்லை என தெரிவித்து வந்த ரெயில்வே நிர்வாகம் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின்பேரில் மதுரை-நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை திட்டப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது.

மதுரை-வாஞ்சிமணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் என 3 பகுதிகளாக இருவழி ரெயில்பாதை திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது பணி நடைபெற்று வரும் நிலையில் 2022-ம் ஆண்டிற்குள் பணி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி

மதுரை-நெல்லை இடையேயான ரெயில் பாதையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கான சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் ரெயில்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை-தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக 144 கிலோ மீட்டர் தூர அகல ரெயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா பொறுப்பு ஏற்ற பின்னர் இத்திட்டப்பணிக்கு மிக குறைந்த அளவிலேயே ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் தற்போது தான் மீளவிட்டானில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இத்திட்டப்பணி முடிவடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே தெரியவில்லை.

துறைமுக நகரான தூத்துக்குடிக்கு வடமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வதற்கும், துறைமுகத்திற்கு வந்த பொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும் சரக்கு ரெயில் போக்குவரத்து அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில் தூத்துக்குடி-மதுரை இடையேயான நேரடி அகலரெயில்பாதை திட்டம் மிக அவசியமானதாகும். இதன் மூலம் மதுரை-நாகர்கோவில் இடையேயான ரெயில்பாதையில் தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூடுதல் ரெயில்களை இயக்க வாய்ப்பு ஏற்படும்.

கோரிக்கை

எனவே மத்திய ரெயில்வே அமைச்சகம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி இடையேயான அகல ரெயில் பாதை திட்டப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணியை விரைவுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தென் மாவட்ட எம்.பி.க்களும், இது குறித்து ரெயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி திட்டப்பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story