மதுரையில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது புதிதாக 134 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது புதிதாக 134 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 31 Aug 2020 1:44 AM GMT (Updated: 31 Aug 2020 1:44 AM GMT)

மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று புதிதாக 134 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையில் 2 வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், கடந்த 4 தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மதுரையில் நேற்றும் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 102 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல், அதில் இருந்து குணம் அடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 129 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 108 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். 110 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குணம் அடைந்தனர். இவர்களுடன் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 813 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 860 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

3 பேர் உயிரிழப்பு

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 56 வயது ஆண், 63 வயது மூதாட்டி, 65 வயது முதியவர் என 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 357 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story