போதைப்பொருள் குற்றச்சாட்டு கன்னட திரைத்துறைக்கு களங்கம் என கூறுவது தவறு நடிகர் சுதீப் பேட்டி


போதைப்பொருள் குற்றச்சாட்டு கன்னட திரைத்துறைக்கு களங்கம் என கூறுவது தவறு நடிகர் சுதீப் பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2020 3:27 AM IST (Updated: 2 Sept 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் குற்றச்சாட்டு கன்னட திரைத்துறைக்கு களங்கம் என கூறுவது தவறு என்று நடிகர் சுதீப் கூறியுள்ளார்.

துமகூரு,

நடிகர் சுதீப் மற்றும் திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் ஆகியோர் நேற்று துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு நேரில் சென்று, மடாதிபதியிடம் ஆசி பெற்றனர். அதன் பிறகு சுதீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாளை (அதாவது இன்று) எனது பிறந்த நாள். கொரோனா நெருக்கடியில் மக்கள் சிக்கி இருப்பதால், எனது பிறந்த தினத்தை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு அத்தகையை கொண்டாட்டத்தை மேற்கொள்வது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன். இதற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிகரமாக மீண்டு வரும்

நான் உங்கள் அனைவரது மற்றும் எனது பெற்றோரின் உடல் நலனை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கொரோனா இன்னும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நாம் அனைவரும் குடும்பத்தினரை மனதில் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் பிறந்த நாள் வருகிறது. இந்த கொரோனா சென்ற பிறகு நான் உங்கள் முன்னிலையில் பிறந்த நாளை கொண்டாடுவேன் என்று உறுதியளிக்கிறேன். முடிந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

கன்னட திரைத்துறையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த ஒரு குற்றச்சாட்டை வைத்து, கன்னட திரைத்துறைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். இதை வைத்து திரைத்துறைக்கு களங்கம் என்று கூறுவது தவறு. இதற்கு முன்பும் திரைத்துறை எத்தனையோ சவால்களை சந்தித்து, மீண்டு வந்துள்ளது. அதே போன்று இந்த நெருக்கடியில் இருந்தும் திரைத்துறை வெற்றிகரமாக மீண்டு வரும்.

அற்புதமான உலகம்

நான் இந்திரஜித்துடன் வந்ததற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இருந்தே எனக்கு அறிமுகம் ஆனவர். எனக்கு பருப்பு சாம்பார் தெரியும். அதை தான் வீட்டில் எனக்கு உணவாக செய்து கொடுக்கிறார்கள். போதைப்பொருள் விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. அதனால் அதுபற்றி பேச விரும்பவில்லை. திரைத்துறை மிகப்பெரியது. அது ஒரு அற்புதமான உலகம்.

ஒரு இடத்தில் 4 பேர் அமர்ந்து உணவு சாப்பிட்டால் அதை பார்ட்டி என்று சொல்கிறார்கள். எல்லா பார்ட்டிகளும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

இவ்வாறு சுதீப் கூறினார்.

Next Story