கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொரோனா


கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Sept 2020 3:35 AM IST (Updated: 2 Sept 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என நேற்று முன்தினம் வரை மக்கள் பிரதிநிதிகள் 57 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் எடியூரப்பா, சித்தராமையா உள்பட சிலர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மந்திரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொரோனா

சிவமொக்கா நகர தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் கே.எஸ்.ஈசுவரப்பா. இவர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை மந்திரியாக பணியாற்றி வருகிறார். சிவமொக்கா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை தடுப்பது தொடர்பாக அவர் அடிக்கடி சிவமொக்காவுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மந்திரி ஈசுவரப்பா உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து மந்திரி ஈசுவரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனது உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை. டாக்டரின் அறிவுரையின்படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளேன். நீங்கள் அனைவரும் என்னை வாழ்த்துங்கள் என்று கூறியிருந்தார். ஈசுவரப்பாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story