புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு கொரோனா பலி 240-ஐ கடந்தது


புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு கொரோனா பலி 240-ஐ கடந்தது
x
தினத்தந்தி 2 Sept 2020 4:23 AM IST (Updated: 2 Sept 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. 2250 பேர் வீடுகளில் தனிமை சிகிச்சை பெறுகின்றனர்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடக்கத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

தாக்கம் அதிகரிப்பு

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது முதல் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

அதிலும் கடந்த ஜூலை மாதம் முதல் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 பேர் வரை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு நாளும் 4 முதல் 8 பேர் வரை இறந்தனர். நேற்று ஒரே நாளில் 12 பேர் இறந்துள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கண்டறிய பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12 பேர் பலி

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது புதுவை உழந்தைகீரப்பாளையம் அய்யனார்கோவில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர், வில்லியனூர் எஸ்.எம்.வி.புரத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி, வில்லியனூர் கிழக்கு தேரோடும் வீதியை சேர்ந்த 84 வயது முதியவர், பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த 64 வயது முதியவர், வாணரப்பேட்டை கல்லரை வீதியை சேர்ந்த 82 வயது முதியவர், அய்யங் குட்டிபாளையத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, மேரிஉழவர்கரை மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், அபிசேகப்பாக்கம் கங்கையம்மன்கோவில் வீதியை சேர்ந்த 36 வயது ஆண் ஜிப்மரிலும், கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் 60 மற்றும் 65 வயது முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொடர் சிகிச்சை

இதுவரை ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 851 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 2 ஆயிரத்து 587 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 264 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 9 ஆயிரத்து 675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மொத்தமாக 240 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 203 பேர் புதுச்சேரியையும், 14 பேர் காரைக்காலையும், 23 பேர் ஏனாமிலும் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.

15 ஆயிரத்தை நெருங்கியது

புதுவை மாநிலத்தில் இதுவரை 76 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 60 ஆயிரத்து 51 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழப்பு என்பது 1.63 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 65.52 சதவீதமாகவும் உள்ளது. புதுவை மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story