திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி பலி பொதுமக்கள் சாலை மறியல்


திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி பலி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Sept 2020 4:48 AM IST (Updated: 2 Sept 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கணவன்-மனைவி இருவரும் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். இதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தர்க்கா தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான்(வயது 38). இவர், இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனாபேகம்(30).

கணவன்-மனைவி இருவரும் எண்ணூரில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் எண்ணூர் விரைவு சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கன்டெய்னர் லாரி மோதி பலி

திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே வந்தபோது பின்னால் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கணவன்-மனைவி மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

லாரி சக்கரத்தில் சிக்கிய ஷாஜகான்-பெனாபேகம் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த உடன் கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

சாலை மறியல்

கன்டெய்னர் லாரிகளால் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் எனக்கூறியும் அப்பகுதி மக்கள் திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், விபத்துக்கு காரணமாக கன்டெய்னர் லாரி உட்பட 2-க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவம் தொடர்பாக காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரான காஞ்சீபுரத்தைச் சேர்ந்த முருகன்(44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரே நேரத்தில் விபத்தில் தாய்-தந்தையை இழந்து இருவரும் அனாதையாக நிற்பதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

Next Story