நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது முககவசம் அணிந்து மக்கள் பயணம்


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது முககவசம் அணிந்து மக்கள் பயணம்
x
தினத்தந்தி 2 Sept 2020 5:52 AM IST (Updated: 2 Sept 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. முககவசம் அணிந்து குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்தனர்.

தென்காசி,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் பஸ் போக்குவரத்தும் நேற்று முதல் தொடங்கியது. ஆனால் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை மாவட்டம்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நடப்பதால், அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கிருந்து நீண்ட தூர பஸ்களாக பாபநாசம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதால், மாவட்ட எல்லைகள் அருகருகே அமைந்து விட்டன.

இதனால் அந்தந்த சோதனை சாவடி வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் தூத்துக்குடி ரோட்டில் வசவப்பபுரம் சோதனை சாவடி வரை பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி செல்வோர் இந்த பஸ்சில் ஏறி, வசவப்பபுரம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாற்று பஸ்சில் ஏறி தூத்துக்குடிக்கு செல்கிறார்கள். இதே போல் நெல்லையில் இருந்து மாறாந்தை சோதனை சாவடியை கடந்து ஆலங்குளம் பஸ் நிலையம் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. தென்காசி செல்வோர் ஆலங்குளத்தில் இருந்து மாற்று பஸ்சில் பயணம் செய்தனர்.

நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் ரோட்டில் வன்னிக்கோனேந்தல் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. அங்கிருந்து மாற்று பஸ்கள் மூலம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் சென்றனர். திருச்செந்தூர் ரோட்டில் செய்துங்கநல்லூர் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. திருச்செந்தூர் செல்வோர் தூத்துக்குடி மாவட்ட பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். நாகர்கோவில் ரோட்டில் ஆரல்வாய்மொழி வரை பஸ்கள் இயக்கப்பட்டது.

இதேபோல் பிற மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் அந்தந்த சோதனை சாவடி மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து நெல்லை மாவட்ட பஸ்களில் ஏறி பயணம் செய்தார்கள்.

முதல் நாள் என்பதால் பஸ்களில் கூட்டம் மிகவும் குறைந்திருந்தது. தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்கு பயணிகள் வந்தனர். அவர்களிடம் மாவட்ட எல்லை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்ற விவரத்தை அதிகாரிகள் எடுத்துக்கூறினர். அங்கிருந்து நடந்து சென்றுஅடுத்த மாவட்ட பஸ்களில் பயணம் செய்யுமாறு அனுப்பி வைத்தனர்.

குறைவான பயணிகள்

பஸ்களில் நேற்று குறைவான பயணிகள், சமூக இடைவெளிவிட்டு பயணம் செய்தனர். ஆனால் ஒருசில பஸ்களில் கூடுதலாகவும், சில பஸ்களில் மிக குறைந்த பயணிகளும் பயணம் செய்தனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தலா 100 பஸ்கள் வீதம் 200 பஸ்களே இயக்கப்பட்டன.

பஸ்சில் ஏறிய பயணிகள் முககவசம் அணிந்து பயணம் செய்தனர். இதனை டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கண்காணித்தனர். முககவசம் இல்லாத பயணிகளை பஸ்சில் ஏற அனுமதிக்கவில்லை.

டவுன் பஸ்கள்

டவுன் பஸ்கள் நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. பேட்டை, சுத்தமல்லி, சீவலப்பேரி, ஐகிரவுண்டு, மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் உறவினர்களை சந்திக்கவும், வேலைக்கு செல்லவும் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் பஸ்கள் இயக்கப்படுவதால் சிரமமாக உள்ளது. முன்பு மண்டலம் என்ற பெயரில் 4 மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டது போல் மீண்டும் பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும்“ என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 1,775 பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்கு தலா 100 என்ற வீதத்தில் பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்“ என்றனர்.

தனியார் பஸ்கள் ஓடவில்லை

அதே நேரத்தில் தனியார் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவில் பயணிகளை ஏற்றிச்சென்றால் வருமான இழப்பு ஏற்படும். மேலும் மாவட்ட எல்லை பிரச்சினை, காப்பீட்டு தொகை அதிகரிப்பு ஆகியவற்றை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பஸ்களை இயக்கவில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story