ஈரோடு மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 106 பேருக்கு கொரோனா கொடுமுடியை சேர்ந்த பெண் பலி


ஈரோடு மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 106 பேருக்கு கொரோனா கொடுமுடியை சேர்ந்த பெண் பலி
x
தினத்தந்தி 3 Sept 2020 4:23 AM IST (Updated: 3 Sept 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கொடுமுடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு,

கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் ஏறுமுகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 359 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மூலப்பாளையம், கருங்கல்பாளையம், பெரியசேமூர், டெலிபோன் நகர், மரப்பாலம், வில்லரசம்பட்டி, பாரதிநகர், சம்பத்நகர், வீரப்பன்சத்திரம் பார்வதி வீதி, வெட்டுக்காட்டுவலசு காந்திநகர், செங்கோடம்பாளையம், நல்லித்தோட்டம், ரெயில்வே காலனி, சென்னிமலைரோடு, வளையக்கார வீதி, வி.வி.சி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பச்சிளம் குழந்தை

இதேபோல் கொடுமுடி, சாலைப்புதூர், வெள்ளோடு அண்ணாநகர், மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், சின்னியம்பாளையம்ரோடு, பெருந்துறை சிப்காட், கோட்டையக்காடு, சென்னிமலைரோடு, மேலப்பாளையம், அசோக்நகர், கிரேநகர், கந்தம்பாளையம், பவானி மேட்டூர்ரோடு, ஓம்காளியம்மன் கோவில் வீதி, சொக்காரம்மன்நகர், ஊராட்சிக்கோட்டை, சோமசுந்தரபுரம், பழனிபுரம், ஓடத்துறை, தொட்டிபாளையம், அந்தியூர் தவிட்டுப்பாளையம், கவுந்தப்பாடி திருவள்ளுவர்நகர், வாய்க்கால்ரோடு, பணக்காட்டூர், சரவணநகர், கோபிசெட்டிபாளையம் பாரதிநகர், மொடச்சூர் வேலப்பன்வீதி, நம்பியூர் ஈஸ்வரன்கோவில் வீதி, சத்தியமங்கலம் கிளைச்சிறை, கொமராபாளையம், மேட்டுப்பாளையம்ரோடு, சி.கே.பாளையம், மலையாடிப்புதூர், அரசூர், அங்கணகவுண்டன்புதூர், புஞ்சைபுளியம்பட்டி தில்லைநகர், பவானிசாகர் செங்குந்தர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவி உள்ளது.

மேலும், ஈரோடு ராமன் பாலக்காடு பகுதியில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தைக்கும், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் 3 வயது சிறுமிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் நோய் தொற்று தாக்கி வருகிறது.

பெண் பலி

நோய் தொற்று பரவல் ஒருபுறம் இருந்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 145 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து உள்ளனர். 1,130 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக கரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொடுமுடியை சேர்ந்த 55 வயது பெண் கடந்த 31-ந் தேதி உயிரிழந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.

Next Story